Dienstag, 14. Januar 2014


பொங்கல்

ஊரிலை எங்கள் வீட்டிலை பொங்கல் மிக சிறப்பான ஒரு திருநாளாகும் பொங்கல் வாரத்துக்கு முதலே பெரிய ஆரவாரம் செய்வார் எனது பேரனார்.

 அவருக்கு பொங்கல்தான் பிடித்த கொண்டாட்டம் தை பிறந்ததுமே முற்றம் எல்லாம் துப்பரவாக்கி  ஒரு சிறிய புல்லுக் கூட இல்லாமே குந்தி இருந்து பிடுங்கி நிலத்திலை இருந்து விளையாட கூடியதாக  முற்றத்தை துப்பரவாக்கி வைத்துடுவார்.

 
அத்தோடு பொங்கல் செய்வதுக்கு என ஒவ்வொரு வருடமும் புதிய மண் அடுப்பு வேறே தன் கையாலே செய்து காய வைத்திடுவார்,  ஒரு கிழமைக்கு முன்னதாக ரவுணுக்கு போய் பொங்கல் பானையும் பானைக்கு சுத்தி கட்டுற மஞ்சள் இலை தொட்டு பொங்கலுக்கு வேண்டிய கசு, பிளம்ஸ், பயறு, சக்கரை, அரிசி, கரும்பு என்று  அத்தனை பொருட்களும் வாங்கி கொண்டு வந்து வைத்திடுவார். எல்லாம் அவரது காசிலைதான் வாங்குவார் அம்மாவிடம் பொங்கலுக்கு சாமான் வாங்க காசு ஒரு நாளும் அவர் கேட்டதே இல்லை.

அந்த கசு பிளம்ஸ் இலை நான் கொஞ்சம் யாருக்கும் தெரியாமே அபேஸ் பண்ணிடுவன் தெரிந்தால் கத்தி குளறி ஆர்பாட்டம் பண்ணிடுவாங்க பொங்கல் சாமான் யாரும் தொடப்படாது என்று சட்டம் வீட்டிலை  ஆனால் நான் கொஞ்சமாதானே எடுக்கிறன் என்று எடுத்திடுவன்.

 
அத்தோடு பொங்கலக்கு தென்னம் பாளைதான் எரிக்க நல்லது என்று அது வேறே எல்லாம் தென்னை மரத்துக்கு கீழே போய் பொறுக்கி காய வைத்து றெடியாக வைத்திடுவார், முதல் நாளே பொங்கல் கோலத்திலை வைக்க என்று சொல்லி பிள்ளையார் வேறே பிடித்து அதில் அறுகம் புல்லும் சொருகி காய வைத்திடுவார்,  சீனவெடி வேறே வாங்கி வைத்திடுவார்.

 
பொங்கல் அன்று அதிகாலை பனி மூட்டமாக இருக்கும் அந்த குளிரிலும் எனக்கு தூக்கம் போய்விடும், எழுந்து எனது பேரன் கோலம் போடும் அழகை பார்த்து கொண்டே இருப்பன்.


அம்மா திட்டுவா நீ என் குளிருக்குள்ளே இப்போ வந்து நிக்குறே என்று அன்று தானாக மனதில் ஒரு சந்தோசம் குடி புகுந்து விடும் துள்ளி துள்ளி ஓடி சுத்தி சுத்தி வந்து எம்மட்டு சுறு சுறுபாக அன்று பொங்கல் கொண்டாட்டம் கொண்டாடியது இன்றும் நினைவில் வந்து சுளரும்.

 
பொங்கல் அன்று அதிகாலை 4 மணிக்கே எழும்பி குளித்து எனது பேரன் அவரே முற்றத்தில் கோலம் பேடுவார் உலக்கை எல்லாம் வைத்து அழகான கோலம் போட்டு ,அடுப்பு வைத்து பொங்கலுக்கு பானையிலே தண்ணியும் கொண்டு வந்து அடுப்பிலை வைத்த பிறகுதான் அம்மா பொங்கலுக்கு அரிசயும் பயறும்  கழுவி கொண்டு வந்து பானையில் போடுவா.

 
நான்  வீட்டு தோட்டதில் பூத்திருக்கும் பூக்களை பிடுங்கி கழுவி ஒரு தட்டில் வைத்து கோலத்தின் நடுவில் வைப்பன் அது மட்டும்தான் அவர் எனக்கு தார வேலை. 

அம்மாவிடம் நான் வலு கட்டாயமாக அந்த கசு எல்லாம் வெட்டி தாரன் என்று கேட்பன்  அம்மாவும் சரி என்று சொல்லி தருவா ஆனால் வாய்குள்ளே போட்டியோ கை முறிப்பன் என்று சொல்லுவா சாமிக்கு வைச்சா பிறகுதான் சாப்பிட வேணும் என்பது அவர்களது நினைப்பு.

 
கடவுள் நமக்குள்ளே தானே இருக்கிறார் என்பது எனக்கு அப்போதே தெரிந்ததோ என்னமோ நான் கொஞ்சம் கொஞ்சமா எடுத்து வாயில் போட்டு கொண்டுதான் கசு வெட்டி கொடுப்பன் சக்கரை வேறே  ஒரு கட்டி எடுத்து  வாய்குள்ளேபோட்டுடுவன்,  சில சமயம் அம்மா அதை கண்டு என்னை முறைச்சு பார்த்து போட்டு பேசாமே போடுவா காரணம் சத்தம் போட்டால் பேரனார் எல்லாம் தூக்கி கொட்டி சன்னதம் ஆடிடுவார் என்று அவவுக்கு பயம் ஹஹஹஹ.

 
பொங்கல் பானையில் பால் பொங்கி கிழக்கு பக்கம் சரிஞ்சு வழிய வேணும்  அதுவரை எங்களை அந்த பக்கம் நடமாடவே விடமாட்டார் பேரன், என்னமோ நாங்கள் கிழக்கு பக்கம் பால் பொங்கி வழியாமல் தடை படுத்திடுவமோ என்று அவருக்கு பயம்.

 
கிழக்கு பக்கம் பால் பொங்கி வழியும் வரை அவர்தான் அடுப்பு கூட எரிப்பார்,  அதுக்கு பிறகுதான் அம்மாவுக்கே பொங்கல் அகப்பை கையில் கிடைக்கும். 

பால் பொங்கியதும் அம்மாவிடம் அகப்பையை கொடுத்து போட்டு சீன வெடி கொழுத்தி போடுவார் எனது பேரன்  அப்போதுதான் அவருக்கு முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

 
அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை பால் வேறு திசையில் பொங்கி வழிந்தால் வீட்டில் ஏதாவது பிரச்சனை வரும் என்று  நான் அறிய ஒரே ஒரு முறை வடக்கு திசை பால் வழிந்தது அவரது முகம் கறுத்து போய் விட்டது அந்த வருடம்தான் எங்களது பேத்தி அவரது மனைவி காலமானார்.

 
அவர்தான் எங்கள் வீட்டில் முதலாளி அவர்தான் எங்கள் வீட்டில் பொங்கல் வைப்பது அவரது விருப்பம் போலே அவர் இறந்ததும் ஒரு பொங்கல் தினத்தன்று, அதனால் எனக்கு பொங்கல் தினத்தை உயிர் உள்ளவரை மறக்கவே முடியாது ஒரு நாளும்.

 
எனது பேரனும் பாரத கதையிலே வார பீஸ்மரும் ஒரே நோக்கமுள்ளவர்கள் போலே எனக்கு இப்போ தோன்றுகிறது. பீஸ்மரும் உத்தராயணத்தில்தான் சாக வேணும் என்பதற்காக தன் உயிரை போக விடாது பிடித்து தை பிறந்ததும்தான் இறந்ததாக பாரத கதை சொல்கிறது.

 
எனது பேரனும் மார்கழி மாதம் தான் நோய்வாய் பட்டு படுக்கையில் 40 நாள் கிடந்தார்  அப்போ எனக்கு 18 வயது என்னை கூப்பிட்டு சொன்னார் தான் தை பிறந்த பிறகுதான் சாகவேணும் என்று,

அப்போது எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை, கடும் சுகயீனமான நேரத்திலும் அவர் தான் சாக போறதையிட்டு கவலை இல்லை என்றும்  தான் செத்தாலும் நான் அழகூடாது என்று எனது கையை பிடித்து சொன்து என் மனதை இன்றும் உருக்கும் வார்த்தைகளில் ஒன்று.

 
உயிரோடு இருக்கும் காலம் வரை 18 ஆண்டுகள் எனக்கு தோழனாக, பாது காவலனாக, சேவகனாக, இருந்த அவரது அன்பு என்னை ஒவ்வொரு பொங்கல் தினத்திலும் இன்னும் கண்கலங்க வைக்கும்.

 
எனது பேரன் ஒரு சாமி பக்தன், தீட்சை எல்லாம் முறையாக கேட்டவர், விரதங்கள் எல்லாம் சிரத்தையாக பிடிப்வர், அத்தோடு வீரகாளி அம்மன் கோவில் திருவிழாவிலை சாமியை தூக்கி செல்வதில் அவரும் ஒருவர், நேர்மைக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்தவர்,  அயலுக்குள்ளே வருகிற பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வைக்கும் நாட்டாண்மையும் அவரே, அத்தோடு வைத்தியம் படிகாத ஒரு வைத்தியர், நாரி பிடிப்பு ,உள்நாக்கு, காச்சல் ,காணாகடி .என்கிற சில நோய்களை அவர் கைவைத்தியம் மூலம் பலருக்கு தீர்த்து வைத்துள்ளார். 
அவர் நாவுத்து பார்த்து விட்டாலே சின்னனிலே எங்களுக்கு வந்த காய்சல் எல்லாம் மாறி போனது உண்மை.

 
எமது இடத்தில் அவருக்கு என்று ஒரு செல்வாக்கு அவர் போகும் போது திண்ணையில் இருப்பவர்கள் எழுந்து நிற்பதும் தோளிலை இருக்கும் சால்வையை எடுத்து மரியாதை செய்வதையும் நான் கண்டு அவரிடம் அது பற்றி கேட்டும் இருக்கின்றேன்,  அதற்க்கு அவர் சரி நீ பேசாமே வா அவங்க அப்படிதான் என்று மட்டும் சொல்லுவார், எந்த பெருமையும் அவருக்கு இருக்கவில்லை அவருடைய அழகும், நேரான நடையும், நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையும், அவருடைய பேத்தி என்கின்ற  ஒரு பெருமையை எனக்கு தேடி தந்தது மனிதர்கள் நடக்கின்ற நல் நடத்தையை பார்த்துதான் அன்று மற்றவர்கள் மதித்தார்கள்.

 
அவரிடம் ஒரு விசேட தன்மை இருந்த படியால்தான் அவர் மரணத்தை தள்ளி போட்டு தன் விருப்பமான நாளிலே உயிர் துறந்தார் பீஸ்மரை போலே.

 அவரது ஆன்மீக சிறப்போ, இல்லை அவரது விருபத்தை கடவுள் ஏற்று கொண்ட காரணமோ தெரியாது அவர் விரும்பிய படி பொ ங்கல் அன்று அதிகாலைதான்  அவர் உயிர் விட்டார்
பொங்கல் தினம் எனக்கு எனது பேரனின் நினைவு நாளாகும்
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen