Dienstag, 12. Februar 2019


புலம்பெயர் வாழ்வியல்


புலம்பெயர் வாழ்வியலில் நம் இனத்தவர்கள் பணவசதியில் சிறந்து விளங்கினாலும் மற்ற விடயங்களில்  அவர்கள் படும் இன்னல்கள்தான் நம் பார்வையில் பெரிதாக தெரிகிறது, 
 புலம்பெயர்ந்து வாழும் தமிழர் தமது கலாசாரம், மதம், மொழி என்பதை மட்டும் அல்ல உடல் நலத்தையும், மனநலத்தையும் சேர்த்து இழந்து வாழும் ஒரு அவல நிலைதான் இங்கு உருவாகி கொண்டிருக்கின்றது.
சுற்றுச் சூழல், கால நிலை என்பது இங்கு நம்மவரின் உடல் நிலையை பெரிதும் பாதிப்பதுடன் வீட்டிலும் வேலை இடத்திலும்  மற்றும் சுற்றங்களின் துயரம் போன்ற விடயங்களினால் பெரும் பாண்மை மக்கள் மனநிலை பாதிக்கபட்டு அதனால் குடும்பதிலும் மகிழ்ச்சியிழந்து, நின்மதியற்ற வாழ்க்கையைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
„வானம் இருக்கு நிலவும் இருக்கு
நித்தம் இரவு வந்திருக்கு
நிலவை மட்டும் காணவில்லே
காசிருக்கு கார் இருக்கு
வீடு இருக்கு   செல்வ வளம்  இருக்கு
விதி மட்டும் நல்லா இல்லே
வெளி நாடு வந்த தமிழருக்கு
விதி மட்டும் நல்லா இல்லே

பேர் இருக்கு புகழ் இருக்கு
பேர் சொல் பிள்ளைகளும் இருக்கு
ஆனாலும் நின்மதியில்லே
பட்டிருக்கு பொட்டிருக்கு
பொன்னிருக்கு பூவிருக்கு
ஆனாலும் புன்னகை இல்லே

நாடிருக்கு நாட்டிலே வீடு இருக்கு
நம்ம உறவுகளும் அங்கிருக்கு
நாம் மட்டும் நாட்டிலே இல்லே
நாடோடியாய் வந்த தமிழனுக்கு
நாதியும் இல்லே“

அதிகமானோர் தாம் நல்லாக வாழ்வதாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள் அப்படி செய்வதால் அவர்கள் தம்மை தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கண்கூடாக காணகூடியதாக இருக்கின்றது, காசு பணம் வீடு நல்ல கார் என்பது இருந்துவிட்டால் மட்டும் மனதில் மகிழ்ச்சி வந்திடுமா?

மன நிறைவு என்பதை அன்று ஊரிலே ஒரு சம்பலும் சோறும் சாப்பிட்டு ஒரு குடிசையிலே வாழ்ந்தவன்  கூட அடைந்திருக்கின்றான், ஆனால் புலம்பெயர் வாழ்வியலில் மாடி வீட்டிலே வாழ்ந்தாலும், கோடி பணத்தை ஓடி ஓடி சேர்த்தாலும், நல்ல விலை மதிப்புள்ள வாகனங்களில் ஓடினாலும், நேரத்துக்கு ஒரு உணவாக விதம் விதமாக சுவைத்தாலும், மது பானங்களை  அள்ளி பருகினாலும் மன நிறைவு என்பதை காணாத மனிதர்கள்தான் சிரிப்பு அற்ற முகங்களோடு வாழுகிறார்கள் தொலைந்து போன மகிழ்ச்சியை தினம் தினம் தேடி தேடி அலைகிறார்கள்.

என்னதான் கஸ்டப்பட்டு ஒரு வேலையை தேடி பிடித்து இங்கு கஸ்டப்பட்டு அன்னிய  மொழியை பேச பழகி வேலைகளை செய்தாலும், அன்னிய நாட்டிலே நாம் பிரஜா உரிமை எடுத்தாலும் கூட நாம் அன்னியர் போலேதான் வாழுகிறோம்  முழு அங்கிகாரமும் எமக்கு எங்கும் கிடைப்பதில்லை.
இங்கு வளர்ந்த அல்லது இங்கு பிறந்த சிறுவர்கள் இங்கு பாடசாலையில் கல்வி கற்று பட்டப்படிப்பை பெற்று இந்த நாட்டு மொழியையும் சட்டங்களையும் நன்கு கையாள தெரிந்தால்  மட்டுமே அவர்களால் நின்மதியாக வாழ முடியும்
படிப்புக்கு எற்ற வேலையும் அதற்குண்டான அங்கிகாரமும் அவர்களுக்கு கிடைக்கின்றது, ஆனால் எத்தனை வருடம் இங்கு வாழ்ந்தாலும் ஊரில் இருந்து பெரியவர்களாக இடம் பெயர்ந்த  புலம் பெயர் வாழ் மக்களால் அங்கீகாரதுடன் மன நிறைவுடன் வாழ முடியவில்லை, காரணம் முக்கியமாக மொழி பிரச்சனை  அவர்களால் அன்னிய மொழியை ஓரளவுக்கு பேச முடிந்தாலும்  அதனை சரியான முறையிலே கையாள முடியவில்லை.
இங்கு வாழும் நம்மவருக்கு இங்குள்ள காலநிலையும் சூழலும் ஒத்துவராமையினாலும், அதீத கொழுப்பு உணவுகளை உண்பதாலும்  அதிகமானோர் இள வயதிலேயே நோயாளிகளாகி விடுகிறார்கள், யாரை கேட்டாலும் நீரிழிவு, பிறசர், குளோஸ்ரோல் அல்லது கான்ஸர் என்று பல வியாதிகளை சுமந்து கொண்டு மருந்தும் வைதியருமாகதான் வாழுகிறார்கள். சிலர் உண்மையை சொல்லாமல் அந்த நோய்களை பற்றி பிறரிடம் விசாரித்துக்கொண்டே இருப்பார்கள் தமக்கு அந்த நோய் இருக்கு என்பதை மட்டும் அடுத்தவருக்கு சொல்ல கூடாது என்று நினைப்பவரும் உண்டு.
அதிகமானோர் மன நிலை பாதிக்கபட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியை இழந்து, வீண் கோபத்தாலும், மன விரக்த்தியாலும் அல்லல் உறுகிறார்கள், இதற்கு எல்லாம் காரணம் என்ன என்று அவர்கள் அறியாமல் கூட இருக்கலாம்  நாம் எதையெல்லாம் இழந்துவிட்டோம் என்பதை ஆற அமர சிந்திப்போமாகில் எமது பிரச்சனை எமக்கு புலனாகும்,
குடும்பங்களில்  ஒற்றுமையின்றி, அல்லது பிள்ளைகளை புரிந்து கொள்ள முடியாமல், மன அமைதியை இழந்து நிற்க்கும் ஒவ்வொரு மனிதரும் நான் என்ன தவறு செய்தேன் என்பதை அடுத்தவர்களிடம் கேட்காமல், ஏன் இப்படி எல்லாம் நடக்குது நின்மதி பறி போக காரணம் என்ன? என்பதை சிந்தித்து பார்பில் அதற்குண்டான விளக்கம் கிடைக்கின்றது, சிந்திப்பவனுக்கு மட்டுமே விடை கிடைக்கும், திருந்த நினைபவனே தானாக  திருந்த முடியும்.

புலம்பெயர் வாழ்வில் எமது பிரச்சனைகள் தலைக்கு மேலே இருக்க சிலர் எப்ப பார்த்தாலும் அடுத்தவரை பற்றியே சிந்தித்து தமது நின்மதியை இழந்து நிற்கின்றார்கள், 
புலம் பெயர்வாழ்வியலில்அன்னிய தேசங்களில் வாழும் நம்மவருக்கு  வீடுகளில் முக்கிய பிரச்சனையாக இரு  விடயம் உள்ளது அது பெற்றவர்க்கும் சிறார்களுக்கும் இடையே மொழி பிரச்சனையும்,  நேரமின்மையும் ஆகும்.
வேலைக்கு போனால்தான் பணத்தை சேர்க்க முடியும் என்பதால் ஆணும் பெண்ணும் வேலைக்கு போவதால் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்க அவர்களுக்கு நேரம் இல்லை, இதனால் பிள்ளைகள் பெற்றவர் இருந்தும், ஒரே வீட்டில் பாடசாலையால் வந்து கன நேரம் தனியாக அனாதைகள் போலே தவிக்கிறார்கள், இந்த தவிப்பும், பெற்றவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள மொழி பிரச்சனையும் அவர்களை கூடுதலாக நண்பர்களோடு சேர செய்கிறது.

 புலம்பெயர்ந்து நாம் அன்னிய நாடுகளில் வாழுகின்ற போதிலே எமக்கு நாம் வாழும் நாட்டின் மொழியே இங்கு வாழ்வதற்கு அவசியமாகின்ற போதிலும் எமது தாய் மொழியாம் தமிழை பிள்ளைகள் கற்றுக்கொள்வதும் அவசியமே!

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் குடும்பங்களில் அனேகமானோருக்கு உள்ள முக்கிய பிரச்சனை என்னவெனில் அது மொழி பிரச்சனையே பெற்றவர்களுக்கோ அன்னிய மொழி தெரியாது அல்லது நன்கு புரிந்து கொள்ள முடியாது, அதே நேரம் அவர்களது பிள்ளைகளுக்கோ தமிழ் மொழி தெரியாது பெற்றவர்களை புரிந்து  கொள்ளவும் அவர்கள் சொல்வதை விளங்கி கொள்ளவும் முடியாமல் போவதால் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே புரிந்துணர்வு இல்லாமல் போகின்றது, இந்த புரிந்துணர்வு  போக போக பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பெரும் பிளவையே ஏற்படுத்துகிறது.

இதன்காரணமாக பிள்ளைகள் பெற்றுவர்களின் அன்பை கூட இழப்பதால் தவறான பாதையிலே செல்கின்றனர் இதை நீங்களே கண்கூடாக காணகூடியதாக உள்ளது சில தமிழ் குடும்பங்களில் பிள்ளைகள் வசதிகள் இருந்தும் கல்வியை நன்கு கற்காமல் தீய வழியிலே போய் கொண்டிருக்கின்றார்கள்.
மொழி தெரியாது போனால் புரிந்துணர்வு குறைகிறது அதனால் அன்பும் பாசமும்  குறைகிறது அல்லது அதை கூட விளங்கி கொள்ள முடியாமல் சிறார்கள் அன்னிய மொழியிலே நண்பர்களுடன் மட்டுமே மனம் விட்டு பேசி கொள்வதால் அவர்களது வழியையே இவர்களும் பின் பற்றி போகிறார்கள், நல்ல நண்பர்கள் கிடைத்தால் நல்ல வழியிலும் தீய நண்பர்கள் கிடைத்தால் தீய வழியிலும் தமது வாழ்வை அமைத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

எமது மொழி, எமது கலாசாரம், எமது  வாழ்வின் நெறி,  என்பதை பிள்ளைகள் அறிந்து கொள்ளவும் பெற்றவர்களை புரிந்து  கொள்ளவும் பிள்ளைகளது மனநிலையை பெற்றவர் அறிந்து கொள்ளவும் தமிழ் மொழி அவசியமாகிறது.
இப்படியாக பல பிரச்சனைக்கு மத்தியில் அன்னிய தேசங்களில் நம்மவரின் புலம் பெயர் வாழ்வியல் போய் கொண்டிருக்கின்றது நாம் இழந்தது நம் நாடு மட்டும் அல்ல,  எமது மதம், மொழி, மன நின்மதி, என்று யாவற்றையும் இழந்து விட்டோம், 

பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பர் ஆனால் பணத்தை மட்டும் சம்பாதிக்க தெரிந்த மனிதரால் மன நிறைவை பெற முடியாது, புலம்பெயர் வாழ்வியலில் எமக்கு மனநிறைவும் உடல் நலமும் இன்றியமையாததாகும், அதனை பேணி பாது காக்க வழி யிருக்கா என்பதை மட்டுமெ நாம் சிந்திப்பது நன்மை பயக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.
புலம்பெயர் வாழ்வியலியல் எம்மை புலம்ப வைத்துவிட்டது தமிழர்களிடையே ஒற்றுமை குறைந்து, உடல் நலம் குறைந்து, மனநலம் இழந்து  யாரை பார்த்தாலும் மனக்குறையோடு, மன மகிழ்வற்ற அல்லது நிறைவு காணாத வாழ்வைதான் வாழ்கிறார்கள், தமிழன் வாழ்வு விதியின் வசத்தால் இவ்வாறு சிதறி அடிக்கப்ட்டு  கடலில் உடைந்த கப்பல் போலே சிதறுண்டு தேசமெங்கும் உறவுகள் பிரிந்து வாழும் நிலைதான் உருவாகியது.

சுற்றங்கள் சூழ நம் சொந்த நாட்டிலே நாம் சேர்ந்து வாழ வழியும் இல்லை, சொந்த மொழியை பேசி ஒரே மனதாய்  ஒருங்கிணைந்து வாழ பந்தங்களும் பக்கம் இல்லை, இதுதான் புலம்பெயர் வாழ்வியல்
கவி மீனா


அந்தி மாலை

அந்தி மாலை அந்த வேளை
அவன் வரவை தினம் பார்த்து
தவித்திருக்கும் ஒரு பாவை
காதலில் விழுந்தே
உலகை மறந்தது ஒரு காலம்

இன்று உலகை  அறிந்து
உண்மையை புரிந்து
வாழ்வை துறந்து துறவு கோலம்
பூண்டதொரு பாவை

பருவ காலங்கள் மாறுவது போலே
மனித மனங்களும்
கால போக்கில் மாறுவதும் ஏனோ?
கவி மீனா