Samstag, 22. April 2017

முத்தம் 

பனி துளி இட்ட முத்தம்
மலரின் இதழில் பதிகிறது
ஆதவன் இட்ட ஏழு முத்தம்
வானவில்லாய் வானில் தெரிகிறது
மழை துளி தந்த முத்தங்கள்
மண்ணில் செடியாய் முளைத்து நிற்கும்

கொஞ்சும் கிளிகள் தரும் முத்தம்
காண்பவர் மனதை கவர்ந்திழுக்கும்
கடல் அலைகள் வந்து தரும் முத்தம்
கரையை மோதி அதிர வைக்கும்
இயற்கையில் கூட முத்தங்கள்
காதலில் எங்கும் யுத்தங்கள்

பெற்றவள் தருவாள் முதல் முத்தம்
அதில்தான் கடவுளின் கருணை
கலந்திருக்கும்
பிள்ளையின் முத்தம்தான் இனிய முத்தம்
காமம் இல்லாத ஒரு முத்தம்
உண்மை அன்பை உணர்த்தும் முத்தம்
அது தாய் மகனுக்கு கொடுக்கும் முத்தம்
மகன் தாய்க்கு கொடுக்கும் முத்தமுமே!

காதலின் பின்னே காம முத்தம்
அது கருவாய் பின்பு உயிர்த்து நிற்கும்
சத்தமில்லாத முத்தங்கள் இட்ட போதும்
சத்தமிடும் மதளையாய் அது வந்து தவழும்
முத்தங்கள் ஆயிரம் கொடுத்தாலும்
முத்தாக ஒரு பிள்ளை வந்து சொத்தாக எமக்கு
நிற்கும் வேளை அதுவே ஆண்டவனின் அருள் முத்தம்
எம் வாழ்வில் ஆண்டவன் தரும் அருள் முத்தம்

கவி மீனா
சில உண்மைகள் 

இந்த தலைப்பை நான் எடுத்துக்கொண்ட காரணம் என்னவெனில் புலம்பெயர் வாழ்வில் நான் கண்ட சில உண்மைகளையும், திசை மாறி போகும் நம்தமிழர்களின் வாழ்வையும்,  தடம்புரண்டு போகின்ற நம் கலாசாரத்தையும்  பற்றிய சில விடயங்களை எடுத்துக்கூறும் நோக்கமேயாகும்.
(ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்) என்ற பாடலைதான் அடிக்கடி பாட தோணுகிறது புலம்பெயர்ந்த வாழ்க்கையிலே, சொந்த வாழ்க்கையே புலம்பல் ஆகிவிட்டது மாடு உண்டு, மக்கள் உண்டு, வீடு உண்டு, உறவுகள் உண்டு, என்று கூடி வாழ முடியவில்லை, இனசனம்தான் தூராமாக வாழ்ந்தாலும் நம் இனத்தவர்கள் என்று நம் நாட்டு தமிழர்களுடன் சேர்ந்து பழகினால் கடைசியிலே மனஸ்தாபங்களும் வீண் பிரச்சனைகளும்தான் அதிகமாக ஏற்படுகிறது.


ஆளுக்கு ஆள் எரிச்சல் பொறாமையுடனும், சுயநல போக்குடனும், அடுத்தவனை போட்டு தள்ள வேணும் என்ற கொலை வெறியுடன்தான் அனேக மக்கள் வாழுகிறார்கள்,  சில காலங்கள் சேர்ந்து நட்புறவு கொண்டாடும் நம்ம சனம், பின் கொஞ்ச நாளையிலே குடுமி பிடித்து அடிபட்டு பிரிந்து போவார்கள், இதுதான் நம்ம தமிழர்களின் ஒற்றுமை   என்பதற்க்கு எடுத்துக்காட்டாகவே தமிழர் புலம்பெயர்ந்த இடங்களி லும்  இப்படி வாழுகிறார்களோ?

„பொறாமை புகுந்த நெஞ்சும் ஆமை புகுந்த வீடும் உருப்படாதுஎன்பது பழ மொழி  மனிதநேயம் இல்லா மனிதர்களாக  அனேக தமிழர்கள் இருப்பதால்தான் இன்று தமிழன் மட்டும் நாடு இன்றி, நாதியின்றி, நடுத்தெருவில் நிற்க்கின்றான், இங்கு வந்து தஞ்சம் புகுந்த  வெளி நாட்டவரையெல்லாம் மனித நேயத்தோடு இரு கரம் நீட்டி அணைத்து அதரவு தந்த  ஜேர்மனியரை கூட ஜே ர்மனியில் இருந்து, அவர்களது ஆதரவிலே வாழ்ந்து கொண்டே வெள்ளையரை கேவலமாக திட்டி சுகம் காண்பதும் நம் தமிழரே!
தழிழருக்குள் ஒற்றுமை இல்லை, தமிழருக்கு மனித நேயம் இல்லை, அடுத்தவன் உயர்வை கண்டால் மனம் பொறுபதில்லை, அடுத்தவன் துயர் கண்டாலும் மனம் இரங்குவதில்லை,  அடுத்தவரின் வேதனைகள் இவர்களது பொழுது போக்கு பேச்சாக மாறி விடுகின்றது, விழுந்தவனை தூக்கி விட கைகள் நீண்டு வராது, அவனை ஏறி மிதிக்கவே கால்கள் ஓடி வரும் இதுதான் அனேக தமிழரின் சொந்த குணம் ஆகும்.
இதை அறிந்து தானே கவிஞர்கள்வாழ்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடாஎன்று அன்றே பாடி விட்டார்களோ?

(அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம் )

என்று வள்ளுவர் சொல்லி சென்றும் அதை கடைப்பிடிப்போர் மிகவும் அரிதாகவே காணப்படுகிறார்கள் உலகிலே, இந்த  மனித குணங்கள் மாறாது எங்கும் காணபடுவதால் தானே நாட்டில் மட்டும் இன்றி வீடுகளிலும் ஒற்றுமைகள் சிதறி போகின்றது, புலம்பெயர் வாழ்க்கையில் தமிழர்களின் வீடுகளிலும் சரி நட்புக்குள்ளும் சரி ஒற்றுமை குறைந்து காணப்படுவதை நாம் அனைவரும் காணகூடியதாகவே இருக்கின்றது.

தமிழர்களிடையே ஒற்றுமைதான் குறைந்து கொண்டு போகின்றது என நினைத்தால் அவர்களது கலாச்சாரம் அதைவிட மோசமாக தலை கீழாக போய் கொண்டிருக்கின்றது  என்பது அதை விட கசப்பான ஒரு உண்மையாகும்.

ஒரு மரத்தில் இருந்து பரவுகின்ற விதைகள் பல வழிகளில் பல இடங்களை போய் சேந்தாலும், அதில் ஒரு சில விதைகள்தான் நல்ல பசளை உள்ள நிலத்தை சேர்ந்து முளைத்து மரமாக வளர்ந்து மீண்டும் மனிதர்களுக்கோ, மற்ற உயிரினங்களுக்கோ பிரயோசனமாய் இருக்கின்றது, அதே போல திசைமாறி காற்றில் அடியுண்டு ஓடும் சருகுகள் போலே எட்டு திக்கும் ஓடி போன தமிழர் வாழ்வு எப்படி ஆகி போச்சு என்பதை ஒவ்வொருத்தர் வாயால் கேட்டால்தான் அறிய முடியும்.
வெளி நாடு வந்த பல தமிழர்கள் மனம்மாறி, குணம்மாறி, மதம்மாறி,  கலாச்சாரம்மாறி தான் வாழ்கின்றார்கள்  என்னதான் பணம் பொருள் சேர்க முடிந்தாலும் நின்மதியை சேர்த்த தமிழர் யார் உள்ளார்? வருங்கால சந்ததிகளும் தமிழை மறந்து, கலாச்சாரம் மறந்து, கலப்பு மணம் புரிந்து, தமிழர் என்ற தனி தன்மை அழிந்துதான் போகிறார்கள்.
தமிழர்களின் மனம், குணம், மதம், பாசை மட்டும் மாறி போகவில்லை நடத்தும் ஒவ்வொரு கலாசார விழாக்களிலும் கூட நமது கலாச்சாரம் என்று மார்பு தட்டி பெருமையாக பேச ஒன்றுமே காணகூடியதாக இல்லை புலம்பெயர் வாழ்வில்.
உதாரணமாக இங்கு நடக்கும் வைபவங்கள் பற்றி ஆராய போனால் சில சீர் கேடான சில வேடிக்கை வினோதங்களே கண்ணில் தெரிகின்றது, கல்யாண சம்பிரதாயங்களில் ஊரிலே நடக்கின்ற இந்து மத திருமண சடங்குகளில் மேளம், நாதஸ்வரம் இசைக்க, கெட்டி மேளம் கொட்ட,  ஐயர் தாலி எடுத்து கொடுக்க, உற்றார் உறவினர் வாழ்த்த, திருமணம் நடந்தேறும், அங்கு திருமணத்தில் ஓதும் மந்திரம் முதல் சடங்கில் வைக்க படும் தேங்காய், பழம், பூ, மஞ்சள், மாவிலை, கும்பம், சந்தணம் என ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு இந்து மத விழக்கம் இருந்திச்சு, அதை விட முக்கியமா பொண்ணும் மாப்பிள்ளையும் கன்னி கழியாமல் இருந்தால்தான் ஐயர் கன்னிகா தானம் செய்து கொடுக்கிற  வழக்கம் கொண்டு வரப்பட்டது.


ஆனால் இன்று வெளிநாடுகளில் நடக்கும் கல்யாணங்களில் நடக்கின்ற நிகழ்வகளுக்கு ஒரு அர்தமே இல்லை, ஏதோ தமிழ் சினிமா படங்களில் வந்தது எல்லாம் தாங்களும் செய்ய வேணும் என்பதே நோக்கமாக கொண்டு, ஒரு பட  சூட்டிங் போல்தான் திருமண சடங்குகள் நடக்கின்றன, மாவிலை தோரணம் இல்லை,  அம்மி மிதித்தலும் இல்லை, அருந்ததியும் காணவில்லை, அதைவிட  முக்கியமாக அனேகமான மாப்பிள்ளையும் பொண்ணும் கன்னி தன்மையோடே இல்லை, காசை கண்ட ஐயர்மாரும் இங்கே எத்தனை பேரோடே  பழகி விட்டிருந்தாலும்  இந்து மதத்தை இழிவு படுத்துமா போலே கன்னிகா தானம் செய்து கொடுத்து,  தாலி எடுத்துக் கொடுத்து, திருமணத்தை  நடத்தி வைப்பார்கள் இது எல்லாம்  இந்து மத திருமணமா?

அடுத்து சிங்கபூர், லண்டன், இந்தியா என்று ஒடி ஓடி வாங்கின ஆடைகளை போட்டு மாற்றி  மாற்றி வீடியோ பிடிக்குறாங்கள் என்று பார்த்தால், மிஸ் இந்தியா என்று பேர் எடுத்த அழகி ஐஸ்வரியாராய் ஒரு படத்திலே பல்லகிலே எறி வந்ததை பார்த்து போட்டு, இங்கே பீஸ் போன பலப் போலே பேஸ் உள்ளது எல்லாம் பல்லக்கிலே ஏறி வருகிறார்கள் அதுதான் தாங்கமுடியாத சிரிப்பு,  ஐஸ்வரியாராய் எங்கே இவர்கள் எங்கே?

ஒரு நாள் கூத்துக்கு மிசை வைச்சா போலே எந்த தராதரமும் இல்லாத சில பேரு எப்படியோ சம்பாதிச்ச பணத்தை வைத்து, இங்குள்ள சனங்களுக்கு பவுசு காட்ட போடுற கூத்து பெரும் கூத்து ,திருமண சடங்குக்கு பதிலாக சினிமா சூட்டிங் அதுகும் கிந்தி பட  சூட்டிங் நடத்தி கடைசியிலே ஒரு வீடியோ தான் மிச்சம்.  சில பேரு எதையுமே சிந்திச்சு செயல்  படுவதில்லை முதல் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கல்வியோ, வேலையோ, ஒழுங்கா அமையுதா என்ற கூட பார்பதில்லை, நாளை யாரு இவர்களை மதிக்க  போகிறார்கள்? என்பது இவர்களுக்கு புரிவதில்லை ஓரு நாள் ரா ஜா  ராணி வேசம் போட்டு பட பிடிப்பு முடிச்சு போட்டு,  பழய குருடி கதவை திறவடி என்பது போலே, அடுத்த நாள் பிச்சா தட்டவோ,   பாண் போடவோ இல்லை  வெள்ளை காரனுக்கு கூலி வேலை செய்யவோ, போக தானே வேணும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

 திருமணதுக்கு காசை அள்ளி கொட்டி கல்யாணம் முடிச்சு ஒரு சில வருடத்திலே பிள்ளையும் கையுமாய் போன பிள்ளை  திரும்பி வரும் போது, இல்லை தனி தனியா பிரியும் போது மிஞ்சுவது அந்த திருமண கஸட் மட்டும்தான் அதை கூட பிறகு பார்க மனம் வராது  25 ஆயிரம் ஒயிரோ கிட்ட செலவு பண்ணி கல்யாணம் பண்ணினாலும்  இப்போ கூடுதலாக  போன வேகத்திலே மண முறிவு எற்பட்டு திரும்பிதான் வராங்கள் இதுதான் உண்மை.

திருமணம் என்ற பேரிலே பட  சூட்டிங் செய்யாமே, இல்லை தெரு கூத்து போடாமே உண்மையான மத சார்பான கல்யாண வீடாக செய்யவேணும், இல்லையேல் பதிவு திருமணம் முடித்து ஒரு சிறிய விருந்து உபசாரம் வைத்தால் போதுமே, விருந்தோம்பல் என்பது வந்தவர்களை உபசரித்தல் அவசியம், அதை விட்டு போட்டு  சூட்டிங்கிலே வீட்டுக்காரங்கள் நிற்க்க, வந்தவர்களுக்கு  ஆன வழியிலே  நேரவளிக்கு  உணவு கொடுக்காமே, நல்ல படி இன் முகம் காட்டி உபசரிக்காமே,  உங்கள் பட பிடிப்பை நடத்தி கொண்டு இருந்தால் வந்தவர்கள் வயிறு பசிக்கும் போது மணமக்களை வாழுத்துவதற்க்கு பதிலாக  மனசுக்குள்ளே ஆச்சும் கரிச்சு கொட்டதான் செய்வார்கள்.

  திருமண விழா என்பது மங்கல இசையோடு,  அனைவரின் வாழ்துக்களோடு நடை பெற வேணுமே அன்றி வெறும் பட  சூட்டிங் ஆக இருக்க கூடாது,  அதை விட மோசம் நாம கொண்டு போற பரிசு பொருளையோ மொய் பணத்தையோ கூட கியுவிலே மணித்தியால கணக்கிலே கால் கடுக்க நின்றுதான் கொடுக்க வேண்டி உள்ளது.
 கல்யாண வீடு மட்டும் அல்ல சாமத்திய கொண்டாட்டங்களில் நடக்கிற கூத்தை பார்த்தால் இன்னும் தலை வெடிக்கும் பாருங்கோ,  ஒரு பிள்ளை சாமத்திய பட்டால் ஊரிலே வெளியாட்களுக்கு  தெரிய படுத்தவ யோசிப்பார்கள், மேலும் சாமத்திய கொண்டாட்டதிலே தாய்மாமன் பால் ஆறுகு வைத்து விட்டால் சுமங்கலி பெண்கள்தான் தலைக்கு தண்ணி வார்த்து அந்த பிள்ளையை அலங்காரம் செய்து வெளியே கொண்டு வந்த பிறகுதான் மற்ற உறவினர்களோ, நண்பர்களோ அந்த பிள்ளையை  காணலாம்.

 ஆனால் இங்கு நடு கோலிலே பிளாஸ்ரிக் நீச்சல் குளம் கட்டி, அந்த குளத்திலே சாமத்தியமடைந்த பெண்பிள்ளையை பட்டு பாவடையோடே விட்டு, ஏழு குடம்  தண்ணிக்கு களர் கலந்து, அதை அழகிய கன்னி பெண்கள் கையிலே கொடுத்து, ஒவ்வொருத்தராக அந்து பெண்ணுக்கு தலைக்கு தண்ணி வார்க்க சுற்றி நிற்கும் ஆண்களும், வீடியோ காரனும் போட்டோ பிடிப்பவனும் தண்ணியிலே நனைந்து, அங்கமெல்லாம் இலைமறை காயாக தெரிய நிற்கும் பெண் பிள்ளையை அணு அணுவாக ரசித்து, படம் எடுக்க பெற்றவரே தங்கள் பிள்ளைகளை கேவல படுத்துவது போலே சாமத்திய வீட்டு கொண்டாட்டம் வைக்கிறார்கள், அல்லது வந்தவன் போனவன் எல்லாம், குளியல் அறையில் பூக்கள் தூவிய தொட்டியில் இருக்கும் பெண்ணுக்கு தலைக்கு தண்ணி வார்க்க  உள்ளே போவதும் என்னை பொறுத்தவரையில் அனாகரீகமான செயல் என்றே தோணுகிறது.

மற்றும் ஒரு சிரிப்பு என்னவெனில் ஒரு பிள்ளைக்கு சாமத்திய கொண்டாட்டமும், பிறந்தநாளும் ஒன்றாக வந்ததால் அவர்கள் சாமத்திய வீடு முடிய பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடியதை கண்ட  மிச்ச  ஆட்களும் பிறகு தங்கள் பிள்ளைகளின் சாமத்திய வீட்டு சடங்கில் மாலை கேக் வெட்டி கொண்டாடிதான் முடிக்கிறார்கள், காரணம் தெரியாமலே கலாசார சடங்குகள் எல்லாம் இவர்களை போலே ஆட்களாலே இங்கு திசை மாறி போய் கொண்டிருக்கிறது.

இது மட்டுமா? குழந்தைக்கு பல்லு முளைத்தால் ஊரிலே பல்லு கொளுக்கட்டை அவித்து, சாமி அறையில் வைத்து, பெற்றவர்களும், உறவினர்களும் கூடி சின்ன சின்ன பல்லு கொளுக்கட்டையை மட்டும்தான் பிள்ளையின்  தலையில் கொட்டுவார்கள், பிள்ளைக்கு நல்ல பல்லு  முளைக்க வேணும் என்பதற்க்காக ஆனால் இங்கு ஒரு வீட்டிலே பிள்ளையின் தலையிலே  பேனா, பென்சில், சொக்லெட்கள், மட்டும் இன்றி பெரிய  கொழுக்கட்டைகளுடன், பெரிய தோடம் பழம் கூட விழுந்து ஓட பிள்ளை பயந்தோ, அல்லது  நோ தாங்காமலோ  அழுது அழுது கொண்டிருக்க பெற்றுவர்களே பேனாவை தள்ளி தள்ளி பிள்ளையை கையால் எடுக்க வைத்து,  தங்க பிள்ளை பேனாவை தூக்கினபடியால் நல்லாக படிக்க போகிறான் என்று, அந்த படிக்காத பெற்றவர்கள் சந்தோச பட்டார்கள் ஆனால் பல்லு முளைத்ததற்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு இன்று வரை புரியவே இல்லை.

இதைவிட இப்போ புதிதாக ஒரு கொண்டாட்டம் வைக்கிறார்கள் என்னெவெனில் வளைகாப்பு, இலங்கையில் இருக்கும் வரை யாருமே வளைகாப்பு எங்க ஊரிலே கொண்டாடியதை நான் கேள்வி படவில்லை, இது இந்திய பிராமணர்கள் செய்யும் ஒரு வைபவமாகும் அதுவும் சுமங்கலி பெண்கள் கூடி தாயாக இருக்கும் ஒரு கற்பினி பெண்ணுக்கு செய்யும் சடங்கு, அந்த வைபவத்தை சீமந்தம் என்றும் சொல்வார்கள் இந்தியாவிலே.


ஆனால் இப்போது இந்த சடங்கை இங்கு யார் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? மதம்மாறி யேசுவின் பாதையில் போன சில தமிழர்கள் இதை கொண்டாடியுள்ளார்கள் யார் வேணுமாகிலும் எதுவாகிலும் கொண்டாடிட்டு போகட்டும் நமக்கென்ன என்று விட்டுவிடலாம் ஆனால் இவர்கள் கையிலே பைபிளை சுமந்து கொண்டு, இருக்கும் போதும் எழும்பும் போதும் சோஸ்திரம் யேசுவே என்று சொல்லி கொண்டு, அடுத்தவர்களுக்கு பைபிளில் உள்ள வசனங்களை போதனை செய்து கொண்டு திரியும் இவர்கள் வளை காப்பு கொண்டாட்டம் வைத்து, தலைக்கு பூமுடித்து, பொட்டு வைத்து குங்குமமும், சந்தணமும், பூசி கொண்டாடுகிறார்கள்,  ஊருக்குதான் உபதேசம் நமக்கில்லை என்பது போலே.  கடவுளையே தங்கள் வசதிக்கு ஏற்ப்ப ஏமாற்றுவோர் மனிதர்களிடம் உண்மையான நேசம் வைப்பார்களா?

இங்கு மதம் என்பது கூட ஒரு பொழுது போக்கு போலே தானே ஆகி விட்டது, வெள்ளிகிழமை சைவகோயில், ஞாயிறு வேதசபை இப்படி எங்கும்  கடவுளை தேடுகிறார்களா? இல்லை ஒரு தெய்வம் கைவிட்டாலும் மற்ற தெய்வம் ஆச்சும் உதவி செய்யும் என்று நினைக்குறார்களா?
ஒற்றுமை, கலாசாரம், மதம் என்று எல்லாம் மாறி போவது மட்டும் அல்லாது இங்கு பிள்ளைகளை ஒழுகமாக வளர்க்க முடிகிறதா என்று பாருங்கள் அதுவும்  அதிகமான வீடுகளில் முடியாமல்தான் போகிறது, இங்கு வளரும் சிறார்களோ இரண்டு கலாச்சாரத்துக்கு நடுவே நின்று திண்டாடுகிறார்கள், அவர்களை பெற்றவர்கள்தான் பாசத்தாலும், பரிவாலும் வளி நடத்த வேணும் பிள்ளைகளுக்கா நேரம் ஒதுக்கி பெற்றவர்களில் யாராவது ஒருத்தர் அவர்களது அன்றாட பிரச்சனை என்ன என்பதை கதைத்து அதற்க்கு ஏற்ற வளி வகைகளை சொல்லி  பிள்ளைகளை நல்வழி படுத்த வேணும்.

அதிகமான பெற்றவர்களுக்கு பிள்ளைகளுடன் கதைக்கவே நேரம் இல்லை இரவு பகல் மாறி மாறி ஓயாத வேலை, இல்லையேல் விடுமுறை நாட்களில் கொண்டங்களும், சீட்டு பிடித்தல், தூர பிரயாணம், என்று அப்பா மார்களுக்கும்  ஓய்வு இல்லை,
அதிகமான அம்மா மார்களுக்கு காதிலை 24 மணி நேரமும் கைதொலை பேசி வைத்தபடிதான் வீட்டு வேலையே செய்ய முடிகிறது, இல்லையேல் சில தாய்மாருக்கு சின்னதிரையில் நேரம் போய்விடும், ஆத்து பறந்து சமையலை மட்டும் செய்து முடிக்கவே அவர்களுக்கு நேரம் போதாது, அதைவிட 100 கிலோ மீற்றருக்கு அங்காலே இருக்கிற நண்பியை பேஸ்புக்கில் காணாவிடில் காசை கொடுத்து ஆள் வைத்து அந்த நண்பி யாருடனோ ஓடி போட்டாவோ என விசாரிக்கவே சில பெண்கள் தங்கள் நேரத்தையும், புத்தியையும் செலவழிக்கும் போது வீட்டிலே தன் பிள்ளை ஏன் கோபப் படுகிறான், ஆட்களுக்கு முன்னாலேயே சினந்து கத்துகிறான், அவனுக்கு என்ன மனகஸ்டம் என்பதை அறிந்து கொள்ளவோ அறிவும் இல்லை நேரமும் இல்லை.

ஒரு சில வீடுகளில் பெண்பிள்ளை கூட வீடு வர விரும்புவது இல்லை, லீவு நாட்களில் கூட சில பிள்ளைகள் பெற்றவருடன் சந்தோசமாக நாளை கழிக்க விரும்புவதில்லை, காரணம் அதிகமான பெற்றவர்களுக்கு தம் பிள்ளைகளை புரிந்து கொள்ளும் தன்மை இல்லை,  இதற்க்கு கலாசார வேறுபாடு ஒரு காரணம், பாசையும் ஒரு காரணம் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவேயே இப்படி வேற்றுமைகள் வந்துவிட்டதுதான் புலம்பெயர் வாழ்வில் பெரிய துன்பம்.

இங்குள்ள பிள்ளைகள்  வீட்டில் அன்பும், புரிந்துணர்வும், நேரமின்மையும், பெற்வர்களது பாசமும் சரியான முறையில் கிடைக்காத போது தங்கள் இஸ்டப்படிதான் வாழ நினைக்கிறார்கள், இந்தியாவிலே அல்லது இலங்கையிலே ஒரு சிறுமியை கற்பழித்த கதை  பத்திரிகைகளிலும் தொலைகாட்ச்சிகளிலும் போட்டு உலகமெங்கும்  பெரும் பிரச்சனைகளை கிழப்பி விடுகிறார்கள்.

 அதை வெளிநாட்டவர் ஏன் இப்படி என்று கேட்டால் நமது நாட்டில் ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ கற்பு என்பது மிக மிக அவசியம் என்று சொல்லி விளக்கம் கொடுக்கும் போது இங்குள்ள நமது தமிழ் சிறார்கள் தாங்களே மனம் விரும்பி கற்பை இழந்து போவதை எப்படி வாய் திறந்து சொல்ல முடியும்? கூடுதலான பிள்ளைகள் ஆடை மாற்றுவது போலே ஆளை மாற்றும் வெளிநாட்டு கலாசாரத்தை பின்பற்றி தமது கற்பை கல்யாணத்தின் முன்பே இழந்து விடுகிறார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை.

 திருமணம் செய்ய போகிறவனிடம் கன்னித்தன்மையை இழந்தாலும் பரவாயில்லை, அவர்கள் (காந்தர்வ மணம்) புரிந்து கொண்டார்கள் என்று சொல்லலாம், ஆனால் இது கூடி வாழ்ந்து உடலையும் பகிர்ந்து, கன்னி தன்மை இழந்து  அதன் பிறகு வேறே ஆளை பிடித்து,  இப்படியே கடைசியாக யார் யாரையே பிடித்து, இறுதியாக வேறு யாருடனோ கல்யாணம் நடக்கிறது இது  புலம்பெயர்ந்த அனேக தமிழ் குடும்பங்களிலேயே நடக்கின்றது.

 பிள்ளைகளின் இந்த போக்குக்கு பெற்றவர்களும் ஒத்துளைபதும் தற்போது சகஐமாக போய் விட்டது, ஒருவனுக்கு ஒருத்தி என்று சொன்ன வள்ளுவன் எங்கே? நமது தமிழ் பண்பாடுகள் எங்கே? மானமுள்ள மறத் தமிழன் காத்து வந்த ஒழுக்கங்கள் தான் எங்கே?

உண்மைகள் சுடும் என்பார்கள்,  எனது கட்டுரையிலும் உண்மைகள் இருப்பதால்  யாரையும் புண் படுத்தும் நோக்கில் எழுதவில்லை, ஒரு தமிழனுக்கு எது முக்கியமோ அதை மட்டும் செய்தாலே போதுமானது என்பதே என் கருத்து,  யாருக்காவது எனது கட்டுரையும் கருத்தும் மனசை நோக பண்ணினால் தவறாக நினைக்காது, கொஞ்சம் சிந்திச்சு பாருங்கள் வாழ்க்ககைக்கு எது முக்கியம் என்றும், எப்படி நமது கலாசர சடங்குகள் நடை பெற வேணும் என்றும், சிந்திச்சு செயல் படுங்கள்  தமிழரது பண்பாடு, ஒழுக்கம், கலாசாரம் திசை மாறி போகிறது  என்பதை சிந்தித்து பார்த்தாலே சிதறி போகும் நம் இனத்தை சீர்திருத்த முடியுமா?

அபிரிக்காவில் தோன்றிய முதல்  மனித இனம்தான் கூர்படைந்து திரிவு பட்டு இனம் மாறி, நிறம் மாறி, மதம்மாறி, பாசை மாறி தேசமெங்கும் பரவி விட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், புலம்பெயர்ந்த தமிழரும் வரும் காலத்தில் புது புது இனமாக மாற போவதை ஒரு காலத்தில் சரித்திரத்தில் எழுத போவது என்னவோ உண்மைதான் அந்த வேளை தமிழர் என்று இனம் காட்ட நம்மிடம் எதுவும் இருக்க போவதில்லை.

புலம்பெயர் வாழ்வில்  தமிழர்கள் திசை மாறிதான் போகிறார்கள்
இதை கண்டும்  சீர்திருத்த முடியாது நிற்பவர்கள் ஒரு சிலரே!
அன்று பாரதி  பாடியது போலே இன்று நானும் பாடுகின்றேன்.

(நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து
விட்டால்)   

கவி மீனா