Montag, 6. April 2015


அன்று தொட்டு இன்று வரை காதல்

அன்று கம்பன் சொன்ன காதல் கண் வழி உயிர் கலந்த காதல், அன்று ஒப்பரிகையில் நின்ற சீதை வீதி வழி போன இராமனை கண்ட  வேளையிலே இருவர் கண்களும் கலந்த போது ஒருவர் பால் ஒருவருக்கு உண்டான அந்த காந்த இணைப்பை, காதல் உணர்வை கம்பன் விழக்கியது  அன்று கண்டோம்.

கண்ணோடு கண் நோக்கில்  காதல் உருவாகிறது,  காதல் வந்த பின் ஆண் நெருங்கி வருகையிலே தான் பெண் நாணி  தலை குனிதல் காதலிலே சொல்ல படுகிறது.

வள்ளிக்கும் முருகனுக்கும் காதல்,   அந்த அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் காதல், அந்த லைலாவுக்கும் மஜ்சுனுவுக்கும் காதல் இப்படியாக காதல் என்பது பவ்வியமாக இன்று வரை தொடர்கிறது,  இந்த காதல் இளையோருக்கும் முதியோருக்கும் பொதுவானதே.   இளமையில் தொடங்கிய காதல் முதுமை வரை நிலைத்தால் அது புனிதமான காதல்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று தாலி கட்டி கொஞ்ச நாளிலேயே காதல் அழிந்து  அவதி படும் இளசுகள்  எத்தனை பேர்? இது காதல் அல்ல காமத்தால் இணைகின்ற ஒரு இளமை கவர்ச்சி.

உண்மை காதல் அது பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, காதல் என்பது ஒரு இனிய கானம் அது இளம் பருவத்தில் வரும் ஒரு  பருவ ராகம் ஆனால் அது முதுமை வரை நிலைத்து  விட்டால் சொல்லுமே ஒரு காவியம்.  காதல் இல்லாத வாழ்வு ஒரு கானல் நீர் போல் ஆகுமே.

கல்லும் முள்ளும்  பாதையில் வந்தாலும் இரு கை சேர்த்தே கடந்து போக செய்யும் காதல், இது காலத்தால் அடிக்கும் சுறாவழி காற்றிலும் அணையாமல் காத்திருக்கும் ஒரு நெருப்பு, அது பிடித்தவர்கள் மனதை கொளுந்து விட்டு எரிய செய்யும் ஒரு தீ பிழம்பு.

காதலிப்பது தப்பில்லை உனக்கென்று பிறந்தவனை உனக்காக உயிர் விட துணிந்தவனை நீ காதலிப்பது தப்பில்லை. கலைஞன் என்று சொன்னால் அவன் சலங்கை ஒலியோடு வருவான்.   கவிஞன் என்று சொன்னால் அவன் நல்ல கவியோடு வருவான். இளைஞன் என்று சொன்னால் அவன் காதல் கொண்டு பெண்ணோடு வருவான்.  இது இயற்கையின் நியதி இதை மாற்ற நமக்கு ஏது தகுதி?

 மனித காதல் அது இளமையில்  வரும் இனிய பூபாள ராகம்,  அதை இளைத்து ரசிப்பவன் ஒரு இனிய ரசிகன்,  அதை ரசிக்க தெரியாமல் பூவை பறித்து கசக்கி மணப்பவன் ஒரு முரடன்,  காதலுக்கும் காமத்துக்கும் ஒரு நாளும் முடிச்சு போடாதீர்கள்.  இரு மனங்கள் சேர்ந்து  ஒரே இராகத்தை இசைத்தால் அது காதல் , ஒரு மனதை முகாரி இராகம் பாட வைப்பது காதல் அல்ல,   காதல் இல்லாத மனிதன் ஒரு கல்லாய் போன சிலையே,  

இயற்கையிலும் காண்கின்றோம் நாம்  காதலை. ஆதவனின் வரவு கண்டு மலரும் தாமரையும், சந்திரனின் ஒளி கதிர் படுவதால் மலர்கின்ற அல்லியும் கார் முகில் கண்டு கழிப்புறும் கான மயிலும்  எடுத்து சொல்ல வில்லையா காதலை ? இல்லை தென்னை இளம் கீற்றினிலே ஆடுகின்ற தென்றல் வந்து சொல்வதில்லையா இந்த காதலை பற்றி ?

பாரதியார் சொன்ன சில வரிகள் இங்கே --

(பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு

வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு

வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு

வெண்நிலவு நீ எனக்கு மேவும் கடல் நான் உனக்கு )

இயற்கையிலேயே காதல் ஒழிந்திருக்கிறது,  இதை காண்பவனோ  காதல் உள்ளம் கொண்டவன்,  இன்று ஒரு புதிய கவிஞன் சொல்கிறான் "நான் காதலிக்க எண்ணவில்லை என் கண்கள் உன்னை காணும் வரை" என்று  இதனால் காதல் அன்றும்  இன்றும் தொடர்கிறது,  என்றும் தொடரும் இந்த காதல்.

காதல் இனிமை இனிமை என்று சொல்லி இலக்கிய சுவையை முடிக்கின்றேன்.

கவி மீனா