Sonntag, 21. Juni 2015


நேரம் இல்லை

 

(பாடு பட்டுத் தேடி பணத்தை புதைத்து வைத்துக்

கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டுங்

ஆவிதான் போயின பின்பு யாரோ யநுபவிப்பார்

பாவிகள் அந்தப் பணம்)

 

நேரம் இல்லை நேரம் இல்லை என்று ஓடி திரியும் சில பேரை காணும் போது எனக்குள் உண்டான  சிந்தனைகள்தான் இந்த கட்டுரை வடிவாகிறது.

ஊரிலை நான் சிறு பிள்ளையாக இருந்த போது எங்கள் வீட்டுக்கு பின் வீட்டிலை ஒரு அப்பு இருந்தவர், அவர் அயலவர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதும் அல்லது பொருட்கள் வாங்கி விற்பதுமாக ஏதோ சிறிய வியாபாரம் செய்து கொண்டு திரிபவர், ஒரு நாள் தன்னும் ஒரு இடத்தில் ஒய்வாக இருக்க மாட்டார் எப்போ பார்தாலும் தலையில் ஒரு கடகத்தை காவி கொண்டு நடந்து கொண்டே திரிவார் .

அவரை மறித்து யாராவது கதை கேட்டால் எனக்கு நேரம் இல்லை கதைக்க என்று ஓடுவார்,

எப்ப அம்மா மறித்து முத்தையா என்று கூப்பிட்டு சில சமயம் ஏதாவது கதை கேட்பா அவரோ எனக்கு சாப்பிட நேரம் இல்லை, குளிக்க நேரம் இல்லை, கதைக்க நேரம் இல்லை இப்படியேதான் சொல்லி கொண்டு போவார் அன்று அவரை பார்த்து நாம் விழுந்து விழுந்து சிரிப்போம்.

 காரணம் பிள்ளைகளும் இல்லாத ஒருத்தர் ஏன் இப்படி நேரம் இல்லை இல்லை என்று சொல்லி அலைகிறார் என எல்லாருமே அவரை நக்கல் அடித்து சிரிப்பதுண்டு.

ஆனால் புலம் பெயர் வாழ்வில் பல முத்தையாக்கள் நேரம் இல்லை நேரம் இல்லை என்று ஓடி கொண்டே இருக்கிறார்கள்.

இங்கு வந்த தமிழர்களுக்கு நேரம் இல்லை, இரவு பகல் ஓட்டம் வேலை வேலை என்று ஒரு வேலை முடிந்தால் மறு வேலை,  பிள்ளைகளை கவனிக்க நேரம் இல்லை கட்டிய மனைவியோடு ஒரு நேரம் எடுத்து அன்பாக பேசி பழக நேரம் இல்லை,

 ஆசைகள் கூடிபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து“  என்ற பழமொழியை மறந்து  காசை மட்டுமே சிந்திச்சபடி ஓடுகிறார்கள் அழிவை நோக்கியே ஓடுகிறார்கள்.

 

ஒரு மாதிரி சம்பாதித்து ஒரு வீடு ஒரு கார்  வாங்கினால் கூட ஆசை அடங்காது,

பிள்ளைகள் படிப்பை கவனிக்கவோ கதைக்கவோ நேரம் இல்லாத பெற்றோர்கள் மகள் பெரிய பிள்ளையாகி விட்டால் ஊருக்கு பறை சாத்த குறைந்தது 15 ஆயிரம் eu செலவு செய்து சாமத்திய வீடு செய்யவும்,

அல்லது பிள்ளைகளுக்கு கல்யாணவீடு என்று சொல்லி 3 கொண்டாட்டம் வைத்து ஒரு 30 ஆயிரம் eu செலவு செய்ய காசு வேணும், இது எல்லாம் யாருக்காக பிள்ளைகளுக்காகவா?

இல்லை பிள்ளைகளுக்கு என்று சொன்னால் அந்த செலவு செய்கிற காசை பிள்ளைகளின் பாங் கணக்கில் போட்டு விடலாமே வீண் செலவு செய்யாமல், இது ஊருக்கு தான் வசதியாக இருப்பதாக காட்ட வேணும் வீடியோ எடுத்து ஊருக்கும் அனுப்ப வேணம் என்கிற நோக்கம் மட்டும்தான்.

ஒருவர் ஓடி ஓடி சம்பாதித்து 2 வீட்டை வாங்கினார் தனது உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவரிடம் ஒரு நாளும் போகவில்லை காரணம் நேரம் இல்லை, ஆனால் 2 வீடு வாங்கி 2 மாதம் கூட சொந்த வீட்டில் வாழ முடியாமல் பரலோகம் இன்று போய்விட்டார்.

இன்னொருத்தர் தனது மனைவி மக்களோடு நேரம் எடுத்து அன்பாக பேசவே இல்லை அவருக்கு அன்பு காட்ட நேரமில்லை, மனைவியின் கதையை கேட்க்க நேரமில்லை,  பிள்ளைகள் குறைகளை கேட்க நேரமில்லை, இன்று பிள்ளைகள் ஒரு திக்காக பறந்து போய்விட்டார்கள், மனைவியும் பட்டது போதும் பிச்சை வேணாம் நாயை பிடி என்று தனி வழி ஏகி விட்டாள், இன்று அவருக்கு  ஒப்பாரி வைக்கவே நேரம் காணாமல் இருக்கிறது „ காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி

காலம் கடந்தபின் கதறுவதில் பயன் இல்லை“.

நேரமில்லை என்று சொல்பவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லை என்றே நான் சொல்வேன் அடுத்தவரோடு மனம் விட்டு பேசினால்தான் அவர்கள் குறைகளை புரிந்து உதவி செய்ய முடியும்,

 நேரம் எடுத்து பிரச்சனைகளை புரிந்து கொண்டால்தானே குடும்பத்தில் ஒற்றுமையை நிலவ செய்யலாம், நேரம் எடுத்தால்தானே எங்கும் அமைதியை நிலை நாட்டலாம்,  சரி அடுத்தவனுக்காக நேரம் எடுக்காது போனாலும் தனக்காக நேரம் எடுத்து ஓய்வு எடுக்கவோ, தியானம் செய்யவோ, அமைதியாக உணவை ருசித்து உண்ணவோ, ஆறுதலாக தூங்கி எழவோ, நேரமெடுத்து ஆண்டவனை சிந்திக்கவோ செய்ய முடியும்?

 

இவர்கள் இதை சிந்தித்து பார்பதில்லை இந்த வாழ்க்கை என்பதே கொஞ்ச காலம்தான் அதை ரசித்து ருசித்து வாழ முடியாது போனால்  மானிட பிறப்பை எடுத்தும் என்ன பயன்? காலன் வரும் போது நேரம் இல்லை நான் வரமாட்டேன் என்று யாராலே சொல்ல முடியும்?

 அவன் வரும் கால் என்ன வேலையாக இருந்தாலும் நேரமெடுத்து அவனுடன் போக வேண்டியதை  ஒரு முறையாவது நினைத்து பார் மனமே!

 இருக்கும் வரை அடுத்தவனை புரிந்துகொள்ளாது, பேராசையோடும் போட்டி பொறாமையோடும், நேரமின்றி அலைந்து, சுயநலத்துக்காக பொருள் பண்டத்தை தேடி புதைத்து வைத்து  நீயும் வாழ்வை அனுபவிக்காது அடுத்தவனுக்கும் அன்புகாட்டி உதவி செய்யாது, மாண்டு போகையில் கூட வருமா எதுவாகிலும்?

நேரம் இல்லை என்று சொன்னதாலே நீ இழந்தது எத்தனை என்பதை கொஞ்சம் சிந்திப்பாய் மனிதா!

நாளை மறைய போகும் இந்த வாழ்வையும், மாண்ட மறு நாழி நாறி போகும் இந்த தேகமும் இருக்கும் போதே கொஞ்சம் சிந்திப்பாய் மனிதா!

மானிட வாழ்வே நீர்குமிழி போலே நிலையற்றது அதில் நிலையான  அன்பை தர முடியுமா என சிந்தித்துப்பார்!

 

நீ என்ன செய்தாய்? எனி என்ன செய்ய போகின்றாய் என்பதை சற்றே  சிந்தித்துபார்!

அகத்தில் ஓடும் அன்பு என்னும் ஊற்றை உணர்ந்து பார்! நேரமெடுத்து  ஆண்டவனை மனக்கண்ணால் நினைத்துபார்!

நாளை யாவும் மறைய போகின்ற உண்மை உனக்கே புரியும்.

 

கவி மீனா

 

 

உன் ஞாபகமே
 

காதல் செய்ய நான் பிறந்தேன்

ஆனால் காதல் என்னை காதலிக்கவில்லை

காதல் என்னை நெருங்கவில்லை

நெருங்கிய காதல் நிலைக்கவில்லை

இசையோடு சேர்ந்த இனிய குரல் போலே

என் மனதோடு நிறைந்த உன் நினைவு

மலரோடு இணைந்த மணம் போலே

என் கருத்தில் கலந்த உன் காதல்

கரைந்து குளைந்து பொங்கலில் சுவைக்கும்

சக்கரைபோல்

நினைவில் நிறைந்து இனிக்கும் உன் குரல்

நீ மறைந்து கருகி சருகாய் போனாலும்

என் உயிரில் புதைந்து தளிர்த்து பசுமையாய்

நிக்கும் என்றும் உன் ஞாபகமே

கவி மீனா