Montag, 12. Juni 2023

 

இன்னும் எத்தனை நாள் 

நாடி தளர்ந்து நடை தளர்ந்து

இடை மெலிந்து பாடையிலே போவதற்கு

பிறப்பெடுத்த மானிடனே

கடை கடையாக ஏறினாலும்

உன் நோயும் பிணியும் தீர

மருந்துமில்லை

 சாக வரம் பெற்று நீடுழி வாழ

வழியுமில்லை

 


நீ மாடி கட்டி வாழ்ந்தாலும்

மடி மீது புரண்டு இன்பமுற்றாலும்

சோடி மாறி சுகம் கண்டாலும்

கடைசியிலே காடுதான்

கட்டுடலும் கலைந்து 

ஆணவமும் அழிந்து

உறவுகளும் தொலைந்து

உருக்குலைந்து நீ போக

காலம் மிக விரைவில்

வரும் என்று தெரிந்தும்

 

பிறரை மதியாமல் குதிக்கிறாய்

அன்பை உணராமல் மிதிக்கிறாய்

எக்கதாளமாய் சிரிக்கிறாய்

நேரமின்றி பறக்கிறாய்

இன்றோ நாளையோ

இன்னும் எத்தனை நாள்

என்பதை மறக்கிறாய்

இந்த நிமிடமாவது சிந்தித்து பார்

உண்மை எது என்பதை சிந்தித்து பார்

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen